Rock Star - குழந்தை நட்சத்திரம் சறோஸ் ஷமீல்

CHAT WITH CC

5/25/2023

"கலைகளுக்கு அழிவில்லை" அது போல் "திறமைகளுக்கு வயதில்லை" திருஞானசம்பந்தர் மூன்று வயதினிலே ஞானப்பால் குடித்து தேவாரம் பாடினார், என்று நாம் அனைவரும் அறிந்த விடயம்.ஆனால் ஞானப்பால் இல்லாமலே ஒரு குழந்தை மூன்று வயதிலேயே பாடலை பாடியது என்றால் நீங்கள் நம்புவீர்களா ?

"நீங்க நம்பலன்னாலும் அதாங்க உண்மை" ஆம் இன்றைய கலந்துரையாடலுக்கான நட்சத்திரமாக இலங்கை புகழ் பெற்ற பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஸமீல் அவர்களின் செல்லப் புதல்வன் சரோஸ் அவர்களை தொடர்பு கொண்டுள்ளோம்.

கேள்வி 1 :- சரோஸ் உங்களைப் பற்றிய அறிமுகத்தை எங்களுக்கு சொல்லுங்கள்?

பதில் :- எனது பெயர் மொஹமட் சரோஷ் ஷமீல் . தந்தை ஷமீல். அவர் இலங்கையை சேர்ந்த பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர். அத்தோடு ஜனாதிபதி விருதுகள் உட்பட அரச இசை விருதுகள், அரச வானொலி விருதுகள் மற்றும் அரச தொலைகாட்சி விருதுகள் என அனைத்தும் அடங்களாக 16 விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். தற்போது தென்னிந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

தாயார் சஷ்னா, அவரும் சிறந்த பாடலாசிரியருக்கான அரச விருதுகள் 03 இனை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியான கலைக்குடும்பத்திலேயே நான் பிறந்திருப்பது மகிழ்ச்சி.

கேள்வி 2 :- உங்களுடைய இந்த பாடல் பயணம் எப்பொழுது ஆரம்பித்தது?

பதில் :- எனக்கு தற்போது 6 வயது கடந்துள்ளது. எனக்கு 3 வயதிருக்கும் போது முதன்முதலாக தனிப்பாடலை பாடியிருந்தேன். அத்தோடு 4 வயதிருக்கும் போது, சூரியன் வானொலிக்கான நிலையைக்குறியிசையிலும் பாடியிருக்கிறேன்.

கேள்வி 3 :- இவ்வாறான பாடல்கள் பாடுவதற்கும் காணொளி பாடல்கள் செய்வதற்கும் உங்கள் பின்னால் உதவியாக இருப்பது யார்?

பதில் :- முதலாவதாக, எனது பெற்றோர். அத்தோடு, இந்த 2020 KID பாடலைப்பொருத்தவரை ஸ்ரீ ஷங்கர் மாமா, JP K சிங்கம் மாமா, ஒளிப்பதிவாளர் அர்ஜுன் மாமா, தொகுப்பாளர் விஜி மாமா, கண்ணன் மாமா மற்றும் பலரின் பங்களிப்பு அடங்கியிருந்தது.

கேள்வி 4 :- "2020 கிட்" பாடல் உருவாக்கத்தின் போது நீங்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் எவை?

பதில் :- பாடல் பதிவின் போது பெரியளவில் சிக்கல் இருக்கவில்லை, ஒரு மணி நேரத்துக்குள் அது முடிந்துவிட்டது. ஆனால் ஒளிப்பதிவின் போது, நிறைய கஷ்டங்களை கடக்கவேண்டியிருந்தது. "Love ல விழுந்தேனே"

என வரும் பகுதிகளில், காணொளியில் இரண்டு காட்சிகளே விழுந்து எழுவது போல் இருக்கும், ஆனால் வெவ்வேறு இடங்களில், வெளிப்புறங்களில் மெத்தையொன்றில் அசையாமல் ஒரு தடி கீழே விழுவது போல விழவேண்டியிருந்தது. அது கடினமாக இருந்தது. அத்தோடு சிலமுறை மெத்தையை தாண்டி நிலத்தில் கூட விழுந்து அடிபட நேர்ந்தது. ஆனாலும் படப்பிடிப்பு முடியும் வரை நான் வலி இருந்ததை யாரிடமும் கூறவில்லை. ஆனால் வருத்தம் என்னவெனில், சில தொழிநுட்ப பிரச்சினைகளால் அவற்றை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.

கேள்வி 5 :- நீங்கள் பாடல்களைப் பாட வேண்டும் இன்று எதனால் ஆர்வம் வந்தது?

பதில் :- தந்தையை பார்த்து தான். நான் இன்னும் சிறிதாக இருந்தபோது, தந்தை இசை வேலைகளை செய்துகொண்டிருக்கும் போது நானும் அவர் பாடுவதை கேட்டு கேட்டு பாடிக்கொண்டிருப்பேனாம்.

கேள்வி 6 :- நீங்கள் இதன் முன்பு நாங்க "வாழனுமா சாகணுமா சொல்லுங்க" என்ற பாடல் டி.ராஜேந்திரன் ஐயா அவர்களுடன் பாடி உள்ளீர்கள். அத்தருணங்களில் உங்கள் மனநிலை எவ்வாறு காணப்பட்டது?

பதில் :- அந்த பாடல் பதிவு நடைபெறும் போது நாங்கள் சென்னையில் இருந்தோம். எனக்கு அவரை யார் என்று தெரிந்திருக்கவில்லை, அவர் வந்தது முதலே என்னோடு அன்பாக நடந்துகொண்டார். நான் அந்த பாடலில் பாடுவதாக இருக்கவில்லை. ராஜேந்தர் ஐயா பாடும் போது நான் வெளியில் அதைக்கேட்டு பாடிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் தான் இருந்தேன். இதைப் பார்த்துக்கொண்டிருந்த எனது தந்தையார் தான் திடீரென்று என்னை பாட அழைத்துப் பாடவைத்தார். அதன் பின்னர், ராஜேந்தர் ஐயா என்னை பார்த்து, "இந்த பையன் பெரிதாக வருவான்" என்று வாழ்த்திச்சென்றார். அந்த வாழ்த்து பலிக்கவேண்டும் என்று எனது பெற்றோர் விரும்புகிறார்கள்.

கேள்வி 7 :- "2020 கிட்" பாடல் youtube தளத்தில் வெளிவந்தபின் சமூகத்தில் உங்களுக்கான வரவேற்பு எவ்வாறு காணப்படுகிறது?

பதில் :- பாடல் Youtube தளத்தில் வெளியாக முதலே, Facebook இல் பாடுவது போல பதிவிட்ட காணொளியே பல லட்சம் பேரால் பார்வையிடப்பட்டிருந்தது. இப்பாடலைப் பார்த்து இலங்கை மட்டுமின்றி வெளிநாடுகளிலில் இருந்தும் தொலைபேசி அழைப்புகளில் வாழ்த்துக்கள் கிடைக்கப்பெற்றன.

ஆனாலும் இன்னுமே இதைப்பற்றிய புரிதல் இல்லை. நான் அப்படியா என்று கேட்டுவிட்டு கைபேசியில் விளையாடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

கேள்வி 8 :- நீங்கள் பாடிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது ?

பதில் :- நான் பாடியவை அனைத்துமே பிடிக்கும். அத்தோடு தந்தையின் அனைத்துப் பாடல்களுமே பிடிக்கும். ஏனென்றால், எனது தாயார் அதையே தான் கேட்டுக்கொண்டிருப்பார்.

கேள்வி 9 :- நீங்கள் உங்கள் பாடல்கள் மூலம் அதிக மக்களை கவர்ந்து உள்ளீர்கள். இவ்வாறான காணொளி பாடல்களை மீண்டும் மீண்டும் எங்களுக்கு தருவதற்கு விரும்புகிறீர்களா?

பதில் :- நிச்சயமாக, நீங்கள் எனது பாடல்களை மிகவும் ரசிப்பதாக தந்தை கூறி சந்தோஷப்பட்டார். அப்படியென்றால், உங்களை சந்தோஷப்படுத்துவது தான் என் சந்தோசம்.

கேள்வி 10 :- உங்களின் எதிர்கால கனவுகள் என்ன?

பதில் :- ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்றை கூறிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக என்ன ஆகுவேன் என்று முடிவெடுக்கவில்லை. ஆனால் கட்டாயம் இசைக்கலைஞனாக எப்போதும் இருப்பேன்.

இந்த சந்தர்ப்பத்தை வழங்கி முதன் முறையாக என்னை நேர்காணல் கண்ட ChilliChips வலையமைப்புக்கு மனமார்ந்த நன்றி. சரோஸ் அவர்களே உங்களுடைய நேரத்தை எங்களுக்காக செலவழித்தமைக்கும் உங்கள் தந்தை தாயின் ஒத்துழைப்புடன் உங்களுடைய பதில்களை அழகாக எங்களுக்கு கூறியமைக்கும் மனமகிழ்ந்து நன்றிகளைக் கூறிக்கொண்டு நீங்கள் கலைத் துறையில் மட்டுமல்லாது கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று சில்லி சிப்(chillichips) ஊடாக வாழ்த்துகின்றோம். நன்றி.