நடிகை அமிர்தரெத்தினம் றுத்றா

CHAT WITH CC

  • பெயர் அமிர்தரெத்தினம் றுத்றா

  • பிறப்பு

  • சமூக ஊடகம்

Face book Ruthra Amirtharethnam Instagram ruthra_amirtharethnam Twitter Baby_girl_ruthra Tiktok Baby_girl_ruthra LinkedIn Ruthra Amirtharethnam Youtube channel RUTHRA'S DIARY

  • படைப்புக்கள்

எனக்குள்ளே சங்காரம் போடியார் ஒமேகா நாளைய உலகம் இளையோர் கையில்

  • விருதுகள்

சர்வதேச சாதனைப்பெண் 2023

வணக்கம். என்னுடைய பெயர் அமிர்தரெத்தினம் றுத்றா. மட்டக்களப்பு களுதாவளை என்னுடைய ஊர்.

எனது பாடசாலை ஆரம்ப கல்வியினை மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்திலும் இடைநிலை கல்வியை மட்/பட்/களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் உயர்தர கல்வியினை மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையிலும் கற்றேன். தற்சமயம் களனி பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பினை கற்றுக்கொண்டு வருகின்றேன்.

இதேவேளை Cooperative Board of Director ஆகவும் கமநல அமைப்பின் விவசாய ஊக்குவிப்பு மற்றும் விழிப்புணர்வு தலைவியாகவும் Battimedia வில் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றேன். 2021 ஆண்டில் இருந்து சினிமாத்துறையினுள் நடிகையாக எனது பயணம் ஆரம்பமானது.

கேள்வி1: நீங்கள் சினிமா துறையில் நுழைந்ததற்கான காரணம் என்ன?

பதில்: கலையின் மூலம் மக்களை மகிழ்விப்பதில் அலாதியான ஆர்வம் தான் சினிமாவில் நான் நுழைய வழி தந்தது.

முதன் முறை ஈழத்துப் படைப்பான கலிகாலன் என்னும் திரைப்படத்தினை பார்வையிட்டதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் ஏற்பட காரண மையமாக அமைந்தது.

கேள்வி2: உங்களுடைய முதல் பட அனுபவம் பற்றி எங்களுடன் பகிருங்கள் முதல் முறையாக உங்களை நீங்கள் திரையில் காணும் பொழுது உங்களின் மனநிலை எவ்வாறு காணப்பட்டது?

பதில்: என் அறிமுகம் கோடீஸ்வரன் அண்ணாவின் எனக்குள்ளே திரைப்படம் தான்.

முதன் முதலில் கமெரா முன்பாக நிற்பதே மிக சவாலான விடயம். ஆனால் கோடீஸ் அண்ணாவின் வழிகாட்டலிலும் அணுகுமுறையிலும் பதற்றம் இன்றி இயல்பாக நடிக்க முடிந்தது.

திரையில் என்னை முதன் முறையில் பார்த்ததை என் வாழ்க்கையின் சிறந்த தருணமாக நினைத்து மகிழ்கின்றேன்.

இந்திய நடிகர்களை இரசித்த என் இரு கண்களால் என்னை திரையில் பார்த்து நானே வியந்தது மறக்கமுடியாத தருணம். அதிலும் என் அம்மா , உறவினர்கள், நண்பர்கள் , தெரிந்தவர்கள் என அனைவரும் திரையில் பார்த்து வாழ்த்தி ஆசீர்வதித்த கணத்தினை இப்பொழுது நினைத்தாலும் இன்பம் தான்.

இத்தகு வாய்ப்பினை எனக்கு தந்த இயக்குனர் குறுந்திரைச் செம்மல் கோடீஸ்வரன் அண்ணா அவர்களுக்கு மனநிறைவான நன்றியை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி3: சினிமா துறை என்றால் அனேகமாக பெண் பிள்ளைகளை பெற்றோர் அதனுள் நுழைய விடுவது குறைவு ஆனால் உங்களுக்கான ஆதரவு எவ்வாறு காணப்பட்டது. உங்களை ஊக்குவித்தவர்கள் பற்றி கூறுங்கள்?

பதில்: எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெறவேண்டும் இல்லை என்றால் அனுபவ பாடங்களை கற்றுக்கொண்டு தவிர்க்க முடியாத தனித்துவத்தில் மிளிர வேண்டும் என்று தான் என்னோட அம்மா ஊக்கப்படுத்துவாங்க. சினிமா துறையினை நான் விரும்பியதை விட பல மடங்கு என் அம்மாவின் விருப்பம் தான். எனக்குள்ளே திரைப்படம் திரையிடப்பட்டதும் அழகிய கைக்கடிகாரத்தினை பரிசளித்து மேலும் உந்துதலாக இருந்தார்.

அதே போல் திவா அண்ணா சொல்லிலும் செயலிலும் பக்க பலமாக இருந்ததுடன் சொந்தங்கள் , நண்பர்கள் அனைவரும் ஆதரவழித்தனர். என் வாழ்வில் வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்கள் இருக்கவில்லை மாறாக பாராளும் பெண்ணை பெற்றெடுத்தோம் என்று கர்வம் கொண்ட நேர்மறை எண்ணம் திணிந்த மனிதர்களே என்னைச் சூழவுள்ளனர். இத்தகு சொந்தங்களை எனக்களித்த இறைவனுக்கு தினமும் நன்றி கூறுகிறேன்.

கேள்வி4: நீங்கள் இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் செய்வதற்கான காரணம் என்ன? இதில் சினிமா சம்பந்தமான விடயங்கள் ஏதும் உள்ளதா?

பதில்: எனது உறவினர்கள் இந்தியாவிலும் உள்ளனர். பல்கலைக்கழக விடுமுறை நாட்களில் சென்றுவருவது வழக்கம். இம்முறை ஆன்மீக பயணமாக சில ஆலயங்களுக்கு சொற்பொழிவிற்காக சென்றதுடன் நான் எழுதும் புத்தகத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்ளவும் தகவல்கள் சேகரிக்கவும் சென்று வந்தேன். வெகு விரைவில் "வெள்ளிடி" எனும் எனது நாவலுடன் இணைந்து இப் புத்தகமும் வெளியிடப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். மேலும் சினிமா சம்பந்தமான விடயங்களை பகிர எதிர்காலத்தில் வாய்ப்புகள் கிட்ட இறைவனை பிராத்திக்கிறேன்.

கேள்வி 5: ஒரு பெண்ணாக இதுவரை நீங்கள் சாதித்த விடயங்கள் பற்றி கூறுங்கள். சாதிக்க நினைக்கும் விடையங்கள் பற்றியும் பகிருங்கள்?

பதில்: மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்னும் கவிமணியின் பாடலை கேட்கும் போதெல்லாம் பெண்ணாய் பிறந்ததே ஓர் சாதனை என்று எண்ணி மகிழ்ந்ததுண்டு. இன்னும் நான் சாதனைகள் படைத்திடவில்லை அதற்கான பாதையில் தவழும் குழந்தையாகவே உள்ளேன்.

கலை,கல்வி இரண்டும் என் இரு விழிகள் இவ்விரண்டிலும் சாதிப்பதையே என் இலட்சியமாக கொண்டுள்ளேன். கலைத்தாகம் கொண்டவர்களுக்கு கல்வி நிலையாகாது என்று கூறுபவர்கள் உண்டு அதனை கடந்து காட்டுவதே என் அவா.ஆன்மீகம்,இலக்கியம் , நடனம், நாடகம்,சினிமா, பண்ணிசை,உளவியல்,ஊடகத்துறை, சித்திரம், சொற்பொழிவு, ஊக்குவிப்பு பேச்சு,விவசாயம்,சிறு வர்த்தகம் போன்ற பல துறைகளில் தேர்ச்சிபெற்றவளாக இருப்பதோடு இதற்காக இலங்கையில் இருந்து இவ்வாண்டிற்கான (2023) சர்வதேச சாதனைப் பெண் விருதினையும் இந்திய அரசாங்க அனுமதி பெற்ற நத்தவனம் பவுன்டேஷனால் பெற்றுக்கொண்டேன்.

இதைத்தவிர Ruthra's Diary எனும் youtube channel மூலமாகவும் பல நன்மை தரக்கூடிய தகவல்களை மக்களுக்கு பகிர்ந்து வருவதோடு ; சில காலமாக Ruthra seva எனும் உளநல இலவச ஆலோசனை சிறு அமைப்பு ஒன்றினையும் எனது நண்பர்கள், உறவினர்கள் இணைந்து நடார்த்தி வருகின்றோம். இத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பேச்சு , விவசாயிகளுக்கான பண்டைய முறை தழுவிய நவீன இயற்கை விவசாய ஊக்குவிப்புகளையும் விழிப்புணர்வுகளையும் வழங்கி வருகின்றேன்.

அத்துடன் கல்வி மூலம் நிர்வாகசேவைக்குள் தெரிவாகி மட்டக்களப்பு மக்களுக்கு சேவையாற்றுவதை என் இலட்சியமாக கொண்டுள்ளதோடு வர்த்தக சினிமா என்னும் கட்டமைப்புக்குள் நடிகையாக மட்டும் மட்டுப்படுத்தாமல் சினிமாவின் ஏனைய பாகங்களிலும் என் திறனை வளர்ப்பதுடன் இன்னும் பல துறைகளில் என் திறனை வளர்த்து அதமூலமாக ஏனையோருக்கும் உதவிட விரும்புகின்றேன்.

கேள்வி 6: நாவல் எழுதும் ஆர்வங்களும் உள்ளதா? இதுவரை எத்தனை புத்தகங்களை எழுதி வெளியிட்டு உள்ளீர்கள்? இதில் ஆர்வம் வரக்காரணம் என்ன ?

பதில்: சிறு வயதில் இருந்தே வாசிப்பு எனது பொழுது போக்கு. இதன் மூலமாகவே சிறு கதை, நாவல் ,கவிதைகள் எழுதுவதில் மோகம் ஏற்பட்டது. சிறுகதைகளையும் கவிதைகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன். அதன் விளைவாக தற்சமயம் "வெள்ளிடி" என்னும் நாவல் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் என் முதல் புத்தக வெளியீட்டினை செய்திடுவேன்.

கேள்வி7: நீங்கள் உங்களுடைய கலை திறனுக்காகவும் உங்கள் ஆராய்ச்சிகளுக்காகவும் என்று பல இடங்களை சுற்றி வந்து உள்ளீர்கள் (ஒரு சுதந்திர கிளியாக) அதிலேயே உங்களை மிகவும் கவர்ந்த இடங்கள் ,உணவு முறைகள், மனிதர்கள் பற்றி கூறுங்கள்?

பதில்: உங்கள் சுதந்திரக் கிளி எனும் வர்ணணை மிகவும் அழகாக உள்ளது. எங்கு சென்றாலும் சொந்த நாடும் சொந்த ஊரும் தரும் சுகத்திற்கு ஈடாகாது. என்னை மிக கவர்ந்தது என்றால் குளிர் நிறைந்த மணாலியும் சோழனின் புகழ் நிறைந்த தஞ்சையும் இராமாயண சிறப்பு பெற்ற ஸ்ரீரங்கமும் என் மனதிற்கு நெருக்கமானவை.

உணவு என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கேயே பலதரப்பட்ட உணவுகளை தேர்ந்து உண்ணுவதில் ஆர்வம் கொள்வேன் சென்ற இடங்களிலும் அவ்வாறே. ஒவ்வொரு ஊருக்கும் ஓர் சிறப்பு உணவு தேடி உண்டு சுற்றுலாவை மேலும் தித்திக்கச் செய்தேன். அதிலும் Yakhni pulao,Aloo methi,dindugal sweets ,Dal Makhani என்னை மெய்மறக்கச் செய்தன.

மக்கள் பற்றி கூறுவதென்றால் ஒவ்வொருவரும் அதிசயம் தான். தனித்தன்மைமான கலாச்சாரம் பண்பாடுகளைப் பின்பற்றும் மக்களிடம் தினசரி பல விடயஙகளைப் புதிதாக கற்றுக்கொள்ள முடிந்தது.

அதிலும் வரவேற்பிலும் உபசரிப்பிலும் நான் மிக ரசித்த இடம் தமிழ்நாடே. ஒவ்வொரு பகுதியிலும் தமிழ் பேசும் அழகோ தனி. அங்கு அனைவரும் இலங்கைத் தமிழ் அழகாக உள்ளதென கூறுவர். இன்னும்பல தேசங்கள் சென்று பல விடயங்களை கற்கவும் பலதரப்பட்ட கலாச்சார பண்பாடுகளில் வாழ்ந்து பார்க்கவும் விரும்புகிறேன்.

கேள்வி8: சிறப்பு ஒரு பெண்ணால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கான உதாரணமாக திகழ்கிறீர்கள். அனைத்து செயற்பாடுகளிலும் 

ஆர்வம் உள்ள நீங்கள் உங்களுடைய திருமண வாழ்க்கையை எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்? அதாவது வாழ்க்கைத் துணை எவ்வாறு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?

பதில்: இதைப் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை. இன்னும் சில ஆண்டுகள் செல்லட்டுமே...

கேள்வி9: நல்லது பல துறைகளில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் சினிமா துறையில் நடிகை எனும் அடையாளம் தவிர்த்து வேறு ஏதும் முயற்சிகள் எடுக்க விரும்புகிறீர்களா?

பதில்: ஆம். முன்பே கூறியது போல் நடிகையாக மட்டும் மட்டுப்படுத்தப் படாமல் சினிமாவின் திரைக்கதை, தயாரிப்பு போன்ற பாகங்களிலும் எதிர்காலத்தில் முயற்சிக்க உள்ளேன்.

கேள்வி10: பல திறமைகளை தன்னகத்தே கொண்ட பெண்மணி என்ற வகையில் உங்களைப் போல் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: "எதிலும் ஆர்வம் வேண்டும் நினைத்தது கைகூடும்வரை விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும்". ஆர்வம் ஒன்றே அனைத்திலும் தலைசிறந்தது. எதிலும் ஆர்வத்துடன் இருந்தால் சிறந்த செயற்திறன் வரும் அதைத் தொடர்ந்து வாய்ப்புக்கள் இறைவனால் தடையின்றி அருளப்படும்.

நன்றி தங்கையே உங்களுடைய வாழ்வில் நீங்கள் நினைக்கும் அனைத்து சாதனைகளையும் நிலைநாட்ட வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய சில்லி சிப்ஸ் ஊடாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓர் கலைஞராக என்னையும் தெரிவு செய்து நுணுக்கமாக திறம்பட கேள்விகளைக் கேட்டு என் நிறைவான பதில்களை சுவைஞராக இரசித்து மகத்தான வாய்ப்பளித்த Chillichips க்கும் தங்களுக்கும் மனநிறைவான நன்றிகள். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

பல கவிஞர்கள் மத்தியில் கவிஞர் பாரதியார் அவர்கள் "பெண்ணாக பிறந்தவள் யார்? எப்படிப்பட்டவள்? ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும்? பெண்ணை எவ்வாறு மதிக்க வேண்டும்?" என்று எத்தனையோ பாடல்களை பெண்களுக்கு சமர்ப்பித்துள்ளார் .

பாரதி கண்ட புதுமை பெண்கள் என்ற வரிசையில் பல காலகட்டத்திற்கு முன்பிருந்து இன்றுவரை ஒவ்வொரு துறையிலும் சாதனைப் பெண்கள் உருவாகிக் கொண்டும், சாதித்துக் கொண்டும்தான் இருக்கின்றனர்.

ஆனாலும் இன்றைய சமூகத்தை பொறுத்தவரை சாதிக்க துடிக்கும் பெண்களை "குடும்ப சூழ்நிலையின் காரணம் ,சமூகம் என்ன நினைக்கும் என்ற ஒரு கருத்து, பாலியல் துஷ்பிரயோகங்கள் என பலமுக பிரச்சனைகள் கட்டிப் போடுகின்றன.

இவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து "பெண்ணானவள் சமையலறைக்கு மட்டும் அரசியல்ல இந்த சமூகத்திற்கே அரசி ஆவாள்" என்று சாதனை புரியும் பெண்கள் ஒவ்வொருவரும் வியக்கத்தக்கவர்களே! இந்த வரிசையில் நடிகை அமிர்தரெத்தினம் றுத்றா அவர்களே இன்றைய சில்லி சிப்ஸ் இன் தொடர்பாடல் நட்சத்திரமாக பிரகாசிக்க வருகிறார் .

வணக்கம் உங்களைப் பற்றிய அறிமுகத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.