நடிகர் - S.K.சுலக்சன்

CHAT WITH CC

7/1/2023

இளம் நடிகர்கள் என்றாலே ஏளனம் சற்று அதிகம்தான். ஒரு விடயத்தை ஆரம்பிக்கும் போதே "உன்னால் முடியாது" என்று தட்டி விடுபவர் மத்தியில் ஒரு நடிகனாக தன் திறமைகளை மட்டும் நம்பி சினிமா துறையில் தடம் பதிக்கும் வீழாத விருட்சங்கள் பல உண்டு. அந்த வரிசையில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வீழா விருட்சமாக தனது திறமைகளை நிலை நாட்டிக் கொண்டிருக்கும் S.K.சுலக்சன் அவர்களே சில்லிசிப்ஸ்(chillichips)இன் இன்றைய தொடர்பாடல் நட்சத்திரமாக பிரகாசிக்க இருக்கிறார். வணக்கம் உங்களைப் பற்றிய அறிமுகத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வணக்கம் chillichips. நான் கிருஷ்ணகுமார் சுலக்சன். என் அறிமுகத்தை chillichips மூலம் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.

நான் விவேகானந்தபுரம் நாவற்குடா என்னும் கிராமத்தில் கிருஷ்ணகுமார் விஜயா எனும் தம்பதிகளுக்கு மகனாக பிறந்து வளர்ந்து எனது பாலர் படிப்பினை விவேகானந்தா பாலர் பாடசாலையில் பயின்று பின்னர் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் 1ம் வகுப்பு தொடக்கம் எனது படிப்பினை பயின்று வந்தேன். மற்றும் பொது சேவைகளிலும் விளையாட்டுத் துறைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

கேள்வி 01 :- உங்களுடைய கலைப்பயணம் எங்கே ஆரம்பித்தது?இதில் ஆர்வம் வர காரணம் என்ன?

பதில் :- எனக்கு சிறு வயதில் இருந்தே நடனங்கள் புரிவதிலும் சினிமா நடிப்பு துறையிலும் ஓர் இலக்கினை அடைய வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டேன். பின்னர் சோசியல் மீடியா என்பவற்றிலும் தன்னை அறிமுகம் ஆக்கிக் கொண்டு Tiktok ஆகியவற்றிலும் எனது நடிப்புத் திறன் ஆன வீடியோக்களையும் பதிவிட்டேன். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரபல நடன வகுப்பு Ravan குழுவினரோடும் இணைந்து தனது நடன பயிற்சியை மேற்கொண்டு வந்தேன். அதிலிருந்து எனது நண்பர்கள் ஆகிய சனு, சிந்து ஆகியோர்கள் அவர்களது செஞ்சிட்டா போச்சி எனும் YouTube Chanel ஊடாக சிறிய குறுந்திரைப்படங்களிலும் அவர்களுடன் இணைத்துக் கொண்டு என்னை நடிக்க செயற்படுத்தினர். அதனூடாக எனது நடிப்பினை வெளிக்காட்டிக் கொண்டேன்.

பிறகு மட்டக்களப்பில் உள்ளஇயக்குனர் குறுந்திரைச் செம்மல் கோடீஸ்வரன் அண்ணன் அவரது Face book பக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வமுள்ளோர் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டார். அதனை அறிந்து நானும் அவருடன் தொடர்பு கொண்ட வேளையில் அவரது குறுந்திரைப்பட பயிற்சியில் தெரிவாகிவிட்டேன். எனது சினிமா பயணத்தில் முதலாவது பெரிய ஓர் குறுந்திரைப்படமாக #தளராதவன் எனும் படத்தில் இளங்கோ எனும் பாத்திரத்தில் எனது நடிப்பினை வெளிக்காட்டினேன் .அப்படத்தினை கண்களுக்கு விருந்தாக திரையரங்கில் போடப்பட்டு பெரும் வரவேற்பினை பெருமை கொண்டது . அதற்குப் பிறகு கோடீஸ்வரன் அண்ணாவின் அடுத்தடுத்த படங்களில் எனக்கு வாய்ப்பளித்தார். அதனூடாக எனது நடிப்பினை கண்டு கழித்த மட்டக்களப்பில் உள்ள இன்னும் பல இயக்குனர்கள் அவர்களது குறுந்திரைப்படங்களிலும் வாய்ப்பளித்தனர். அதில் விஸ்ணுஜன் அண்ணா முக்கியமானவர்.சினிமா பயணத்தில் பல சான்றிதழ்களும் கிடைக்கப் பெற்றமை பெரும் சந்தோஷம். இப்படியான ஊக்குவிப்புகள்தான் மேலும் ஆர்வம் வர காரணமாக அமைந்தது.

கேள்வி 02 :- நீங்கள் கலைத்துறையில் ஒரு நடிகனாக வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைக் கவர்ந்த மிகவும் பிடித்தமான நடிகர் யார் என்பதை எங்களுக்கு கூறுங்கள். அதாவது உங்களுடைய Roll model Actor யார்?

பதில் :- வேற யாரு நம்ம அண்ணன் தளபதி தான். சிறுவயதில் இருந்து நடிப்பின் மீது ஆர்வம் வர முதல் காரணமே விஜய் அண்ணா அவர்கள் தான் .நடனம் ஆகட்டும் நடிப்பாகட்டும் நகைச்சுவையாகட்டும் சண்டைக்காட்சியாகட்டும் அனைத்தையுமே நான் விரும்பி பார்ப்பேன். நான் அவர் ரசிகன் என்று கூறுவதை விட அவரின் சிஷ்யன் என்றே கூறலாம்.

கேள்வி 03 :- உங்களுடைய பொழுதுபோக்காக எவற்றையெல்லாம் விரும்புகிறீர்கள்?

பதில் :- எனது ஓய்வு நேரங்களில் நான் பொழுது போக்காகஎனது விருப்பத்துக்குரிய Football மற்றும் cricket என்பவற்றை விளையாடுவேன்.இல்லையேல் எனக்கு மிகவும் பிடித்த நடனத்தை பயிற்சி செய்து கொண்டு இருப்பேன். அதிகமாக விஜய் அண்ணாவின் பாடல்களுக்கு.

கேள்வி 04 :- இலங்கையிலே இதுவரை நீங்கள் பயணம் செய்த மாவட்டங்கள் பற்றி கூறுங்கள் அதில் உங்களை மிகவும் கவர்ந்த மாவட்டம் எதுவாக உள்ளது?

பதில் :- திருகோணமலை, கொழும்பு, அம்பாறை, கண்டி, நுவரெலியா, மன்னார், யாழ்ப்பாணம், பொத்துவில், பொலனறுவை இப்படி போன்ற பல மாவட்டங்களுக்கு சென்று எனது பயணங்களை சிறப்பித்து இருக்கிறேன்.அதிலும் எனக்குப் பிடித்த மாவட்டமானது திருகோணமலை அங்கு நான் பழகிய நண்பர்கள் என்னை சிறப்பாக உபசரித்தனர். அழகான பாரம்பரிய இடங்களும் சூழ்ந்த இடமாகவும் சிறப்பித்துக் கொண்டிருக்கின்றது தெய்வீகமான இடங்களைக் கொண்ட அமைவிடமாக திகழ்கின்றது. சுற்றுலா துறைகளிலும் வர்ணிக்கிறது.

கேள்வி 05 :- நீங்கள் கவலையாக இருக்கும் பொழுது அதனை எதிர்கொள்ள எப்படியான விடயங்களை மேற்கொள்வீர்கள்? அதாவது உங்களுடைய கவலைக்கு மருந்தாக எவற்றையெல்லாம் கையாலுவீர்கள்?

பதில் :- எனது கவலைகளுக்கு மருந்தாக மெல்லிசை பாடல்களை அதிகமாக கேட்பேன். எப்படிப்பட்ட கவலையாக இருந்தாலும் அதற்கு இசையே மருந்தாகின்றது. அதோடு சிறிய தூக்கம் என் துக்கத்திற்கு பெரிய மருந்து.

கேள்வி 06 :- சினிமா துறையில் நீங்கள் இப்பொழுது நடிகனாக மட்டும் வலம் வருகிறீர்கள். இத்துறையில் வேறு முயற்சிகள் செய்ய விரும்புகிறீர்களா?

பதில் :- ஆம் நிச்சயமாக பாடல் கேட்பதில் ஆர்வம் இருப்பதை போல் பாடல் பாடுவதற்கும் ஆர்வமுள்ளது. இவ்வாசையை ஒரு நாள் நிறைவேற்றுவேன் என்று நம்பிக்கை உள்ளது.

கேள்வி 07 :- சினிமா துறையில் நீங்கள் கையாண்ட சவால்கள் பற்றி எங்களுடன் பகிர முடியுமா?

பதில் :- எனக்கு சினிமா துறையில் நடிகனாக வரவேண்டும் என்று ஆசை. எப்படியோ ஒரு வாய்ப்பை பிடித்து படிப்படியாக ஏறி வரும்போது என்னை தள்ளி விடும் எண்ணத்தில் "நீ நடிப்பாயா? உன்னால் நடிக்க முடியுமா? விட்டு போட்டு வேற வேலைய பாரு" என்ற கருத்துக்களின் மத்தியில் தான் நான் என் திறமைகளை வெளிக்காட்டி கொண்டு இருக்கிறேன். மேலும் என்னை பிடிக்காத சிலர் முகநூலில் எனது புகைப்படங்களை வைத்து கேலி பிரச்சனைகளை மேற்கொண்டார்கள். இப்படியான சவால்களுக்கே நான் அதிகம் முகங்கொடுத்துள்ளேன். எத்தனை சவால்கள் வந்தாலும் அதனை தாண்டி பயணிப்பேன் என்று நம்பிக்கை உள்ளது.

கேள்வி 08 :- உங்களுடைய எதிர்கால கனவு மற்றும் லட்சியம் எதுவாக இருக்கின்றது? உங்களை விரும்பும் உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில் :- பெரிய கனவு லட்சியம் என்று எதுவும் இல்லை சாதாரண நடிகனாக எல்லோரைப் போன்று எனக்கும் இருக்கும் ஒரு கனவு ஒரு நடிகனாக அனைவராலும் விரும்பத்தக்க ஒருவனாக என் வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதாகும் இதுவே எனது லட்சியமுமம் கூட.

கேள்வி 09 :- நீங்கள் இதுவரை எத்தனை படைப்புக்களை கொடுத்துள்ளீர்கள்?

பதில் :-

  • தளராதவன் - 2021

  • கலிகாலன் - 2022

  • மூன்றாம் தடையம் - 2021

  • பாசம் - 2021

  • மெய்யறிவு - 2021

  • யாழினி - 2022

  • மிருகம் 2 - 2023

  • போராட்டம் - 2021 மற்றும்

  • பொண்ண தொட்டா கெட்டான் பாடல் - 2021

  • புளி மாங்கா புளி பாடல் -2021

  • காற்றே பாடல் - 2022

  • ம.த.கு மீடியாவிற்காக சிறு விளம்பரம் ஒன்றும்.

மகிழ்ச்சி சுலக்சன் உங்களுடைய நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி எங்களுடைய கேள்விகளுக்கு சிறப்பாக பதில்களை வழங்கியமைக்கு மிக்க நன்றிகள். உங்களுடைய ஆசைப்படி ஒரு சிறந்த நடிகன் என்று அனைவராலும் பேசப்படும் ஒரு கலைஞனாக வரவேண்டும் என்று சொல்லி சில்லிசிப்ஸ் (Chillichips) மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நான் முதலில் சில்லிசிப்ஸ்க்கு நன்றிகளை கூறிக் கொள்கிறேன். என்னுடைய படைப்புகள் குறைவாக இருந்தாலும் எனது திறமையை மதித்து எனக்கான இந்த கலந்துரையாடலை மேற்கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள். மற்றும் இலைமறை காயாக இருக்கும் கலைஞர்களை இதேபோன்று ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.