மருத்துவர் - இசையமைப்பாளர் கௌரிகாந்தன் வித்யாருண்யன்

CHAT WITH CC

6/12/2023

பட்டம் பல வாங்கினாலும் பாதை எவ்வழி மாறினாலும் உதிரத்தோடு கலையூறிய கலைஞர்கள் பலரும் பலவிதமான படைப்புகளை மக்களிடையே பகிர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

"அரசனுக்கு தன் நாட்டில் மட்டும்தான் சிறப்பு கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்றெல்லாம் கேள்வியுற்றிருப்போம்.எப்படிப்பட்ட மேற்படிப்பை கற்றாலும் கலைக்கென தன்னை அர்ப்பணிக்கும் கலைஞர்கள் சிறிது வித்தியாசமானவர்கள்தான்.அந்த வரிசையில் அவ்வாறு வித்தியாசமான இசைப்பிரியன் வித்தியாருண்யன் அவர்களே இன்றைய சில்லி சிப்ஸ் "Chillichips"இன் தொடர்பாடல் நட்சத்திரமாக பிரகாசிக்க இருக்கின்றார்.வணக்கம் அண்ணா உங்களைப் பற்றிய அறிமுகத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நான் கௌரிகாந்தன் வித்யாருண்யன். நான் ஒரு முன்-பயிற்சி மருத்துவராக (pre-intern) உள்ளேன். நான் மருத்துவராக முன்பிருந்தே ஒரு நல்ல இசையமைப்பாளராக ஆகிவிடவேண்டும் என்ற கனவுடன் இப்போதும் இருக்கும் ஒரு இசைப்பிரியன், அவ்வளவு தான். நான் உயர்கல்வியை பயின்றது அதிக ஈழத்து கலைஞர்களை வளர்த்து விட்டுக்கொண்டிருக்கும் மட்/புனித மிக்கேல் கல்லூரியில் 2013 பிரிவில் தான். பட்டப்படிப்பை கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடத்தில் மருத்துவத் துறையில் பயின்று இவ்வருடம் நிறைவுசெய்தேன்.

கேள்வி 1 :- தங்களுடைய இசைப் பயணம் எங்கு எவ்வாறு ஆரம்பித்தது ?

பதில் :- 3 வயதில் ஆரம்பித்தது. நான் முறையாக எந்த இசைக்கருவியையும் பயிலவில்லை. எனக்கு முதலில் விசைப்பலகை வாசிக்க கற்றுக்கொடுத்தது எனது அப்பா. அன்றிலிருந்து பாடல்களை கேட்டு அதனை விசைப்பலகையில் இசைக்க பழகிக்கொண்டேன். படிப்படியாக புல்லாங்குழல், கிளாரினெட் போன்றவற்றிலும் பாடல்களை கேட்டவுடன் தானாக இசைக்க பழகினேன்.

பாடசாலையில் Band வாத்தியக்குழுவில் இணைந்ததன் மூலம் இன்னும் பல அனுபவங்களை பெற்றேன். தரம் 6 முதல் 11வரை கர்நாடக சங்கீதத்தை பாடசாலையில் பயின்றேன். பின்பு இசை அமைக்கவேண்டும் என்ற ஒரு ஆர்வம் உயர்தரம் பயிலும் போது உருவானது. அப்போது கையடக்கத் தொலைபேசியில் சில சாதாரண செயலிகளைகொண்டு சாதாரண தாள நடைகளை போட்டு பழகினேன். அப்போது எனக்கு எண்ணியல் ஒலி பணியகங்கள் (Digital audio workstations /DAW) பற்றிய அறிவு இருக்கவில்லை. இசை அமைக்க ஒரு பெரிய கலையகம், பல இசைக்கலைஞர்கள் தேவை. என்னிடம் அந்தளவு பணமும் இல்லை. இசை ஞானமும் இல்லை. இதனால் அந்த ஆர்வம் படிப்படியாக விட்டுப்போகும் போது சில சம்பவங்கள் திருப்புமுனையாக அமைந்தன.

கிஷாந்த் இயக்கத்தில் அப்துல் கலாம் என்ன சொன்னாரு குறும்படம் 2013 இல் வெளியாகி அதன் இசை பெரும் வரவேற்பை பெற்றது. அதில் பணியாற்றிய விஷ்ணுஜன் எனக்கு தரம் 11 இலிருந்து நண்பர். அப்போது எனக்கு இந்த இசை எப்படி அமைக்கப்பட்டது என அவரிடம் அணுகி வினவ முடிவுசெய்தேன். அதற்கு முன்னரே இந்த கலை உலகிற்கு சம்மந்தமே இல்லாத இன்னொரு நண்பன் என் சந்தேகத்தை தீர்த்து இன்று எனது அத்தனை படைப்புகளுக்கும் அடித்தளமிட்டான். தரணீந்தன் கமலசந்திரன் அவர் பெயர். அப்போது இன்னொரு இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த தர்ஷன் அவர்களுக்கு DAW ஒன்றை பதிவிறக்கம் செய்துகொடுத்தவர் அவர். இந்த விடயத்தை என்னிடம் அவர் கூறி இருக்கவிட்டால் DAW பற்றி எனக்கு அறியக்கிடைக்க பலகாலம் சென்றிருக்கலாம். எனக்கு இசை அமைப்பதில் ஆர்வமும் போயிருக்கலாம். இதை அறிந்தபின் தான் DAW பற்றி முற்றாக ஆராய முற்பட்டேன். எனது முதல் DAW குரு தர்ஷன் தான். ஆம் நான் மேற்கூறிய இசை அமைப்பாளர் தர்ஷன். அவர் தான் எனக்கு அதன் அடிப்படைகளை பழக்கித்தந்தார். அதன் பின்பு தான் நான் படிப்படியாக புது விடையங்களை ஆராய்ந்து, online இல் கற்று என்னை வளர்த்துக்கொண்டேன்.

நான் பாடசாலையில் படித்த கர்நாடக சங்கீதம் இசையமைப்பில் எனக்கு பெரிதும் உதவியது. லதா ஆசிரியர் தான் எனக்கு கர்நாடக சங்கீதத்தில் ஒரு விருப்பத்தை ஏற்படுத்தியவர். இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு கலைஞனுக்கு முதல் வாய்ப்பு என்று ஒன்று அமையவேண்டும். அந்த முகவரியை எனக்கு அமைத்து தந்தது 2014 இல் இயக்குனராக வளர்ந்திருந்த விஷ்ணுஜன். சிவா அண்ணா திரைப்படம் டரில் இசையில் உருவாக்கிக்கொண்டு இருக்க அதில் "மனதோடு சுமையொன்று...." என்ற பாடலை இசையமைக்க எனக்கு சந்தர்ப்பத்தை வழங்கினார். அந்தப்பாடல் வெற்றிபெற உறுதுணையாக நின்றது எனது இன்னுமொரு நண்பர். அந்தப்பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் அமுதீசன் கோபாலகிருஷ்ணன். இவ்வாறு தான் எனது இன்று நீங்கள் அறிந்த இசைப்பயணம் ஆரம்பித்தது.

கேள்வி 2 :- உங்களுக்கு இசையில் அதிக ஆர்வம் ஏற்படக்காரணம் என்ன?

பதில் :- அப்பா. எனது விசைப்பலகை ஆசிரியர். அவரும் விசைப்பலகையை முறையாக கற்றவர் அல்ல. ஆனால் பல கருவிகளை கேள்வி ஞானத்தில் வாசிக்கக்கூடியவர். அவரது காலத்தில் புனித மிக்கேல் கல்லூரி Band இசைக்குழுவின் அங்கத்தவர். ஜீவன் ஜோஸப் ஆசிரியரின் பயிற்றுவிப்பில் வளர்ந்தவர். BMICH இல் நடைபெற்ற அணிசேரா மாநாட்டிற்கு மட்டக்களப்பில் இருந்து ஒரே பாடசாலையாக சென்ற புனித மிக்கேல் கல்லூரியின் band வாத்தியக்குழுவின் அங்கத்தவர். இந்த கதைகளை கேட்கும்போதே ஒரு ஆர்வம் தானாக வந்துவிடும்.

கேள்வி 3 :- தற்பொழுது நீங்கள் வைத்தியத்துறையில் மாணவனாக வலம் வருகிறீர்கள். இசை துறை வைத்தியத்துறை இதில் உங்களுக்கு எது மிகவும் எளிதாக உள்ளது?

பதில் :- பணியாற்றுவதில் எளிதானது இசைத்துறை தான். ஆனால் போட்டி அதிகமாக உள்ள துறையும் அதுதான்.

கேள்வி 4 :- இசைத்துறையில் இதுவரை எத்தனை படைப்புகளை கொடுத்துள்ளீர்கள்?

பதில் :- ஒரு திரைப்படம், 15 குறும் படங்கள், திரைப்படத்தில் அடங்கிய 3 பாடல்களுடன் சேர்த்து 10 பாடல்கள்.

கேள்வி 5 :- இசை தவிர்த்து வேறு அடையாளத்தை சினிமா துறையில் பதிக்க எண்ணுகிறீர்களா?

பதில் :- நான் ஒளிப்பதிவு இயக்கத்தை ஒரு திரைப்படத்திற்கும், 5 குறும்படங்களுக்கும் செய்திருந்தேன். படத்தொகுப்பு, பாடல்தொகுப்பு மற்றும் வர்ணக்கலவை போன்றவற்றையும் அவற்றிற்கு செய்திருந்தேன். அடையாளம் பதிக்க எண்ணவில்லை. ஆனால் எனது இசையில் உருவாகும் படைப்பிற்கு மேற்படி தேவைகள் திடீரென ஏற்படும் போது அதை செய்ய தயாராக இருக்கவேண்டும் என்பது எனது எண்ணம்.

கேள்வி 6 :- நீங்கள் இசையமைத்த முதல் பாடல் பற்றிய அனுபவத்தை எங்களுக்கு கூற முடியுமா?

பதில் :- மனதோடு சுமையொன்று பாடல். விஷ்ணுவின் இயக்கத்தில் டரிலின் பின்னணி இசையில் உருவான வெற்றிப்படம். அந்த பாடலுக்கு இசை அமைக்க சந்தர்ப்பம் கிடைத்தது 2014 இல். விஷ்ணுவின் கண்ணில் பட்ட முதல் இசையமைப்பாளராக இருந்தேன். அந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துத்தரும்படி என்னை அணுகினார். ஆனால் அது எனது உயர்தர பரீட்சையின் இரண்டாவது முயற்சி நெருங்கிக்கொண்டிருந்த காலம். எனவே மறுத்துவிட்டேன். பின் அதற்கு டரில் இசையமைத்து இருந்தார். அவருக்கு பதில் நான் இசையமைத்து இருந்தால் நிச்சயம் இசை அந்தளவு நன்றாக வந்திருக்காது. ஏனெனில் அப்போது தான் நான் படிப்படியாக பழகிக்கொண்டிருந்த காலம். எனவே ஒரு பாடலுக்கு மட்டும் இசையை அமைக்க இணங்கினேன்.

அப்போது ஒலிப்பதிவு செய்ய கலையகங்கள் மட்டக்களப்பில் பெரிதாக இல்லை. அங்கு சென்று ஒலிப்பதிவு செய்யும் அளவுக்கு படக்குழுவில் யாரிடமும் பொருளாதார வசதியும் காணப்படவில்லை. எனவே தெரிந்த ஒருவரின் வீட்டில் ஒரு சாதாரண அறையில் தான் ஒலிப்பதிவு செய்தோம். அதற்கு பெரும் உதவியாக அமைந்தவர் ஜீவானந்தம் ராம் அண்ணா. அவரது ஒலிவாங்கி மற்றும் உபகரணங்களை தான் பயன்படுத்தினோம். அது எனது ஆரம்ப காலம். எனக்கு அப்போது ஒலிக்கலவை பற்றி போதிய அறிவு இருக்கவில்லை. எனவே பாடலை ஒலிக்கலவை செய்யும் போது பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. அந்த அனுபவங்களை வைத்துத்தான் பின்னர் படிப்படியாக முன்னேற முடிந்தது.

கேள்வி 7 :- மருத்துவத்துறை என்பது உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். இசைத்துறை என்பது மனரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும். இவ்விரு துறைகளுமே உங்கள் கைவசம் உள்ளது ,இவற்றில் நீங்கள் அதிகமாக நேசிக்கும் துறை எது?

பதில் :- நிச்சயமாக இசை தான். மருத்துவம் எனது தொழில். இசை எனது வேட்கை. மருத்துவ படிப்பில் எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இசை தான் அதற்கு மருந்தாக அமையும். மருத்துவக்கல்லூரியில் திரைப்படங்களுக்கு பின்னணி இசை, காணொளிப் பாடல்களை

செய்திருக்கிறேன். அண்மையில் வெளியான "தகத்தகாய தமிழே...." காணொளிப்பாடலும் அவ்வாறு ஒன்றுதான். அதன் இசையமைப்பின் போது பாடலை தயாரித்து வரிகளை எழுதிய மருத்துவர் என்னை இசைத்துறையில் மட்டும் பயணிக்கும்படியும் ஒருமுறை எனக்கு அறிவுறுத்தியது எனக்கு ஞாபகம் 😂.

கேள்வி 8 :- நீங்கள் உங்கள் இசை பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள் பற்றி கூறுங்கள்?

பதில் :- பொருளாதார சவால் முக்கியமான ஒன்று. கருவிகள், ஒரு முறையான கலையகம் அமைக்க போதியளவு வசதி இருக்கவில்லை. ஒரு பாடலை ஒலிப்பதிவு, ஒலிக்கலவை செய்ய இன்னொரு கலையகத்தை நாடவேண்டிய நிலை உள்ளது. இப்போதும் அப்படித்தான் உள்ளது. எதிர்காலத்தில் அது மாறலாம். அடுத்தது ஒலிக்கலவை பற்றிய போதிய தெளிவு ஆரம்பத்தில் இருக்கவில்லை. அதனால் பாடல்களில் பொருத்தமான இசைக்கருவிகளை சேர்ப்பதில் பெரும் சிக்கல் இருந்தது.

இசையமைப்பாளரும் ஒலிக்கலவையாளருமான சஞ்ஜித் லக்ஷ்மன் எனது ஒரு பாடலுக்கு ஒலிப்பதிவு மற்றும் ஒலிக்கலவை செய்தார். அவர் தான் எனக்கு ஒலிக்கலவை பற்றி பல விளக்கங்களை தந்தார். அந்த பாடலுக்கான கலவை முடிய நீண்ட காலம் எடுத்ததால் அவரை எப்போது எல்லாம் சந்திக்கநேர்ந்ததோ அப்போது எல்லாம் அவரது பணி முறை, அவரது பாணி, அவரது உபகரணங்கள் பற்றி சொல்லித்தருவார். அதன் பின் தான் நானும் ஒலிக்கலவை செய்ய ஆரம்பித்தேன். அது பற்றி மேலும் மேலும் கற்றுக்கொண்டேன்.

அதிகளவான projects இசை வரை வந்து கைவிடப்படுவது மிகவும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. எல்லோரும் படம் எடுக்குறார்கள் என்பதற்காக நாமும் படம் எடுப்போம் என்று குறிக்கோள் இல்லாமல் படம் எடுக்கமுயன்று தோற்றவர்களிடம் ஆரம்பகாலகட்டத்தில் நானும் இசையமைப்பாளராக சிக்கி இருந்தேன். அது ஒரு பெரும் பின்னடைவாகவும் அமைந்தது.

இசை ஓரளவு முடிந்திருக்கும் அல்லது பட முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கும் அல்லது ஒரு பாடல் ஒலிப்பதிவு பூர்த்தியாகி இருக்கும் வேளையில் படம் கைவிடப்படுவது மனவேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக அதில்

சம்பளத்தை எதிர்பாராது உழைப்பை வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் இருந்திருக்கும்.

கேள்வி 9 :- உங்களுடைய தயாரிப்பில் அல்லது இசையமைப்பில் நீங்கள் அதிகம் விரும்பும் பாடல்கள் எவை?

பதில் :- இசையமைத்த பாடல்களில் தகத்தகாய தமிழே பாடல் மிகவும் பிடித்தது. அடுத்தது வெல்வெட் பெண்ணே பாடல். Medz Rock, Creed of Assasins பாடல்கள் நானே தயாரித்த பாடல்களில் பிடித்த பாடல்கள். விரைவில் கோடீஸ்வரன் அண்ணாவின் இயக்கத்தில் ஒரு பாடல் வெளிவர இருக்கின்றது. அது இவற்றைவிடவும் முன்னிலைபெற வாய்ப்புகள் அதிகம்.

கேள்வி 10 :- உங்களுடைய எதிர்கால இலக்கு மற்றும் லட்சியம் எதுவாக உள்ளது?

பதில் :- எங்கு என்னை எதிர்காலம் கொண்டுசெல்லும் என்று தெரியாது. ஆனால் எங்கு இருந்தாலும் அந்த இடத்திற்கும் மட்டக்களப்புக்கும் சேவையாற்றுவது எனது குறிக்கோள். அது மருத்துவம் ஆனாலும் சரி, இசை ஆனாலும் சரி. முழு நீள திரைப்படங்களுக்கு இசை அமைப்பது எனது ஒரு குறிக்கோள். ஒரு கலையகத்தை இங்கு உருவாக்கவேண்டும். ஒருவேளை மட்டக்களப்பிலேயே இருக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் இணைந்து பணியாற்றுவது எனது நெடுநாள் விருப்பம். எமது மண்ணை முன்னேற்றவேண்டும் அது தான் லட்சியம். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மகிழ்ச்சி. எங்களுக்காக உங்களின் நேரத்தை ஒதுக்கியமைக்கும் எங்கள் கேள்விகளுக்கு அழகாக பதில் கூறியமைக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு உங்களின் இசைப்பயணம் தொடர்ந்து கொண்டே செல்லவும் உங்களின் எதிர்கால இலக்கு வெற்றிகரமாக அமையவும் சில்லி சிப்ஸ் (Chilli chips) ஊடாத வாழ்த்துகிறோம்.

Vithyarunyan:- என் மனமார்ந்த நன்றிகளை Chilli chipsக்கும் உங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

கௌரிகாந்தன் வித்யாருண்யன் அவர்களின் படைப்புக்கள்:

  • 2014 - சிவா அண்ணா - மனதோடு சுமையொன்று

  • 2014 - விடியுமா

  • 2014 - King maker - Dropped

  • 2014 - சிறகுகள் - Dropped

  • 2014 - என் life என்னாச்சு - Dropped

  • 2016 - நாங்க 13

  • 2018 - Human

  • 2019 - கழுதை

  • 2019- சொல்லடி கண்மணி

  • 2019 - சஞ்ஜனா

  • 2019- Medz Rock

  • 2020 - ஏகதீரனே

  • 2020 - Creed of Assassins

  • 2020 - கனி

  • 2020-கண்ணம்மா

  • 2020 - Covid-19 விழிப்புணர்வு Rap

  • 2022 - இருளகழ்வு

  • 2022 - வெல்வெட் பெண்ணே

  • 2022 - என் வானத்தில் ஒரு நட்சத்திரம் திரைப்படம்

  • 2023 - தகத்தகாய தமிழே

  • 2023 - Milk Rice

  • 2023 upcoming -சான்றாளன்

  • 2023 upcoming - Love Song காத்திருந்தோம்

  • 2023 - மேலும் 2 பாடல்கள் ஒலிப்பதிவில்