இசையமைப்பாளர் A.J.சங்கர்ஜன்

CHAT WITH CC

6/23/2023

மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும் சிலருக்கு இசையே மருந்தாகுகின்றது. அப்படி பலரின் வாழ்வில் இனிமை சேர்ப்பவர்களே இசையமைப்பளர்கள் ஆவர். பல வேலைகளில் மத்தியில் சில வேளை மாத்திரம் இசைக்கென நேரம் ஒதுக்குபவர்களில் முழு நேர வேலையையும் இசைக்காக மட்டுமே என்று வாழ்பவர்கள் அரிது தான். அப்படி அரிதான இசை பிரியர்களில் ஒருவரான இசையமைப்பாளர் #A.J.சங்கர்ஜன் அவர்களே சில்லி சிப்ஸ்சின் இன்றைய தொடர்பாடல் நட்சத்திரமாக மிளிர இருக்கிறார். வணக்கம் அண்ணா முதலில் உங்களைப்பற்றிய அறிமுகத்தை முதலில் கூறுங்கள்.

நான் அ.ஜெ.சங்கர்ஜன் (AJ Shangarjan). நான் ஒரு முழு நேர இசையமைப்பாளராக மற்றும் ஒரு YouTuber ஆகவும் இருக்கிறேன். காணொளிப்பாடல்கள், குறும்படங்கள், கவர் பாடல்கள் மற்றும் முழு நீளத்திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகின்றேன்.

எனது ஊர் மட்டக்களப்பு களுதாவளை. மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் கல்வி கற்றேன். தற்பொழுது இசைக்கலையகம் அமைத்து இசையமைப்பதையே முழு நேர வேலையாக செய்து வருகிறேன்.

கேள்வி 1 :- மகிழ்ச்சி உங்களுடைய இசைப்பயணம் எங்கு எப்பொழுது ஆரம்பித்தது ?

பதில் :- 2013 ஆம் ஆண்டு எனது பாடசாலையின் 94 ஆவது ஆண்டை முன்னிட்டு பாடசாலையால் எடுக்கப்பட்ட ''தடைகள்'' எனும் குறுந்திரைப்படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமானேன். பின்னர் அதே வருடம் (2013) எனது க.பொ.த. சாதாரணதர பரீட்சையை முடித்துவிட்டு ஓர் தனியார் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட குறுந்திரைப்பட போட்டிக்காக ''ஆவியா'' எனும் குறுந்திரைப்படத்தை எனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி, நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமாகினேன். சிறு வயதிலிருந்து இசையின் மீது நாட்டம் கொண்டதால அதன் பின்னதான படைப்புக்களில் இசைத்துறையினூடாக பயணிக்க ஆரம்பித்தேன். அதன்படி 2015 ஆண்டு ''யார் குருடன்?'' எனும் குறும்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினேன்.

மட்டக்களப்பின் "வேட்டையன்" முழு நீளத்திரைப்படத்தின் ரைட்டில் பாடலுக்கும் இசையமைத்துள்ளேன். நான் பணியாற்றிய முதல் முழு நீளத்திரைப்படமாகும்.

கேள்வி 2 :- இசைத் துறையில் ஆர்வம் வருவதற்கான காரணம் என்ன?

பதில் :- இசையின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் இவ்வுலகில் இருக்க முடியாது. அதன்படி சிறு வயது முதல் இசையின் ரசிகனாக இருந்து வருகிறேன். அவ்வாறு இருக்கையில் தரம் 8 படிக்கும் பொழுது எனது ஊர் ஆலய திருவிழா ஒன்றில் முதல் முறையாக ஒரு விளையாட்டு விசைப்பலகை ஒன்றை எனது அப்பா வாங்கி கொடுத்தார். அன்றிலிருந்து தானோ என்னவோ தெரியாத அவ்வளவு காலமும் இசை ரசிகனாக இருந்த நான் இசையை உருவாக்கும் ஆர்வம் வந்தது என்று. ஆனால் அப்பொழுது எல்லாம் எனக்கு இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்றோ அல்லது இந்த துறையில் தான் எதிர் காலத்தில் நான் பயணிக்க போகிறேன் என்ற எண்ணங்கள் என் மனதில் இருக்கவில்லை.

சிறு வயது முதல் கணினியின் மீது இருக்கும் ஒரு ஆர்வம் காரணமாக ஒரு மென்பொருள் பொறியாளர் ஆக வேண்டும் என்பது ஒரு ஓரமான ஆசையாக இருந்தது. அதே போல எனது க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்து இரஜரட்டை பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் படிப்பினை 2019 ஆண்டு ஆரம்பித்தேன். ஆனால் தற்பொழுது இசையின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக, இசைதுறையிலே பயணிக்க வேண்டும் என்ற கனவுகளோடும், அது வரை எனது வீட்டிலிருக்கும் எனது அறை ஒன்றில் செய்து வந்த இசையினை கடந்த வருடம் 2021 முதல் ஒரு இசைக்கலையகம் AJS Studio எனும் பெயரில் ஆரம்பித்து முழு நேரமாக செய்து வருகிறேன்.

கேள்வி 3 :- உங்களுடைய youtube சேனலின் பெயர் என்ன ?இதனை எத்தனை காலமாக இயக்கி வருகிறீர்கள் ?

பதில் :- எனது YouTube பக்கத்தின் பெயர் AJ Shangarjan (https://www.youtube.com/@AJShangarjan). எனக்கு YouTube Channel ஆரம்பித்து நடாத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆரம்பத்தில் இருந்ததில்லை. அது எவ்வாறு ஆரம்பித்தது என்று கூறுகிறேன். அவ்வளவு காலமும் விளையாட்டு விசைப்பலகை வைத்து இருந்த எனக்கு 2012 ஆம் ஆண்டு எனது அப்பா Beginners கான ஒரு விசைப்பலகையினை எனக்கு பரிசளித்தார். அந்த கால கட்டத்தில் அதனை முறையாக கற்றுக்கொள்ள வசதிகள் இருக்கவில்லை. அப்பொழுது எனது அயல் ஊர் அண்ணா ஒருவரிடம் 2,3 பாடல்களை வாசிப்பதற்கு கற்றுக்கொண்டேன். சிறிது காலம் கழித்து மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தும் எங்கு

சென்று கற்றுக்கொள்வது என தெரியாமல் இருந்தது. அப்பொழுது எனது அப்பாவின் தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்தி Google மற்றும் YouTube இல் தேடினேன். அங்கு ஓரிரூ பாடல்களே காணப்பட்டது. நமக்கு பிடித்த பாடலை வாசிப்பதற்காக தேடினால், பழைய பாடல் ஒன்று இரண்டே வந்தது. அப்பொழுது அந்த இணையத்தில் இருந்த தமிழ் பாடல்களை சிறிது சிறிதாக பழகி, தானாகவே ஒரு பாடலை கேட்டு வாசிக்க பழகிக்கொண்டேன்.

அப்போது என்னை போல சிலர் விசைப்பலகை வாசிக்க ஆர்வம் இருந்தும் பயில இடமில்லாமல் இருப்பார்கள் என எண்ணி ஒரு YouTube Channel 2014 - 2015 காலப்பகுதியில் ஆரம்பித்து அதில் எனக்கு தெரிந்த பாடல்களை பதிவேற்றி வந்தேன். அந்த Channel க்கு வரவேற்பு கிடைத்தது. ஒரு சில காரணங்களால் அந்த Channel இல் தொடர முடியவில்லை. சில காலம் கழித்து 2019.04.27 அன்று மீண்டும் புதிய ஒரு Channelஐ ஆரம்பித்து தற்போது வரை நடாத்தி வருகிறேன். அதில் எனது சொந்த பாடல்களை வெளியிடுவதோடு, Piano கற்றுக்கொள்பவர்களுக்காக பாடல்களை வாசிக்க கற்றுக்கொடுத்து வருகிறேன். இன்றைய திகதி வரை (2023.06.17) 77,400 Subscribers உடன் பயணித்து கொண்டிருக்கிறேன்.

கேள்வி 4 :- நீங்கள் இசையமைத்த பாடல்களில் அதிக வெற்றியை உங்களுக்கு தந்த பாடல் பற்றி கூறுங்கள்?

பதில் :- நான் இசையமைக்கும் பாடல்கள் அனைத்துக்குமே முதல் ரசிகன் நான். எனது படைப்புக்கள் என்னை தவிர்த்து இன்னும் ஒருவருக்கு பிடித்திருந்தாலே அதை எனது வெற்றியாக எண்ணுகிறேன். அந்த வகையில் நான் பணியாற்றிய அனைத்து பாடல்களுமே எனக்கு திருப்தியை தந்தவையே. அதை தவிர்த்து நான் இசையமைத்த பாடல்களை கேட்டு சிலர் அவர்களின் வாழ்க்கையோடு இணைத்து பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது என கூறும் பொழுது, ஏதொ ஒரு பெரிய சாதனையை அடந்து விட்டேன் என எண்ணங்களும் தோன்றும் சில சமயம்.

கேள்வி 5 :- தற்பொழுது சினிமா துறையில் இசையமைப்பாளர் எனும் அடையாளத்தோடு

வேறு அடையாளங்களை பதிக்க விரும்புகிறீர்களா?

பதில் :- ஒலிப்பொறியாளராகவும் பணியாற்றி வருகின்றேன். எனது இசைப்படைப்புக்கள் தவிர ஏனைய குறும்படங்கள், பாடல்களுக்கான Mixing & Mastering பணிகளையும் மற்றும் ஒலி வடிவமைப்பாளராகவும் வேலைகளை செய்து வருகின்றேன்.

கேள்வி 6 :- சுமாராக இதுவரை எத்தனை இசை படைப்புகளை நீங்கள் மக்களுக்கு கொடுத்துள்ளீர்கள்?

பதில் :- 200 ற்கு மேற்பட்ட பியானொ கவர்களும் மற்றும் ஒலி பொறியியலாளராக 50 ற்கு மேற்பட்ட படைப்புகளில் பணியாற்றியுள்ளேன்.

கேள்வி 7 :- சினிமா துறையில் இசையமைப்பாளர் என்ற ரீதியில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றி சொல்லுங்கள்?

பதில் :- சவால் என்ற வகையில் இசையமைப்பாளர் என்றதை தாண்டி சினிமா துறையே பெரிய சவாலாகதான் இருக்கின்றது. ஏனெனில் இந்தியாவில் சினிமா என்றால் பெரும் வரவேற்பு உண்டு ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. ஒரு படத்தை திரையரங்கு கொண்டு சேர்க்கும் வரை அப்படக் குழுவினரே அதன் அனைத்து பொறுப்புக்களிலும் கஸ்டப்படுகின்றனர்.

சினிமாக்கான முக்கியத்துவம் அதிகம் ஏற்பட்டால்தான் வேலை செய்யும் கலைஞர்கள் முழு நேரமாக வேலை செய்வார்கள் மற்றும் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு அதிகமான லாபம் கிடைத்தால் தான் மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள். ஆனால் தற்போது உள்ள கலைஞர்கள் ஒரு பகுதி நேரமாகதான் தான் சினிமா சம்பந்தமான வேலைகளை செய்கின்றார்கள். காரணம், அதிக லாபமின்மை ஆகும். இருந்தாலும் முந்தைய சினிமாவை விட தற்போதைய சினிமா வளர்ச்சி அடைந்துவிட்டது என்றே கூறலாம்.

கேள்வி 8 :- உங்கள் இசை பயணத்தில் எந்நிலையிலும் உங்களோடு பயணிக்கும் நபர்கள் பற்றி கூறுங்கள் அவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன ?

பதில் :- என் இசை பயணத்தில் கூடவே வரும்

நபர்கள் என்றால் முக்கியமாக எனது பெற்றோர்களை கூறுவேன். ஏனென்றால் சினிமாவுக்கு என்று பெரிய தளம் இல்லாத நம் நாட்டில் இசை துறையை தெரிவு செய்து அதை முழு நேரமாக வேலை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தபோது எனக்கான ஆதரவை இன்று வரை தருகின்றார்கள். என்னுடைய கனவை மதித்து எனக்காக முழு ஆதரவும் தரும் என் பெற்றோர்களுக்காகவும் என் கனவுக்காகவும் இந்த இசை பயணம் .

கேள்வி 9 :- உங்களின் படைப்புகளில் எத்தனை படைப்புக்கள் உங்கள் கைக்கு விருதுகள் சேர்த்தது?

பதில் :- பொதுவாக விருதுகளுக்காக படைப்புகள் எதுவும் செய்ததில்லை ஆனால் படைப்புகள் செய்யும் பொழுது விருதுகளுக்கான அறிவிப்புகள் வந்தால் படைப்புகளை அனுப்பி உள்ளோம். சொல்லப்போனால் இதுவரை எந்த விருதும் கிடைத்ததில்லை ஆனால் முதல் முறையாக இயக்குனர் கோடீஸ்வரன் அண்ணாவின் "தழும்பு" எனும் படத்திற்காக யாழ்ப்பாணத்தில் நடத்திய குவியம் விருது விழாவில் "சிறந்த இசையமைப்பாளர்" எனும் விருது கிடைத்தது. என் இசை விருதுகளுக்காக என்பதை விட மக்களுக்காகவே என்று கூறலாம் .

கேள்வி 10 :-இசை கொண்ட உங்கள் வாழ்க்கையின் இலட்சியமும் எதிர்கால கனவும் எதை நோக்கியதாக உள்ளது?

பதில் :- எனது லட்சியம் கனவு இலக்கு எல்லாமே ஒன்றே ஒன்றுதான். அதுதான் "இசை", அனைவராலும் விரும்பத்தக்க ஒரு நல்ல இசையமைப்பாளராக வரவேண்டும் என்பதாகும் .

மகிழ்ச்சி. உங்களுடைய நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி எங்களுடைய கேள்விகளுக்கு மிகவும் சிறப்பாக பதில்களை தந்தமைக்கு சில்லி சிப்ஸ் (Chillichips)ஊடாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி. சில்லி சிப்ஸ் ஊடாக கலைஞர்களின் திறமைகளை வெளிகொண்டுவரும் உங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இசையமைப்பாளர் சங்கர்ஜன் அவர்களின் படைப்புகள் 

  • 2013

  • தடைகள் - குறுந்திரைப்படம்

  • ஆவியா - குறுந்திரைப்படம்

    2015

  • யார் குருடன் - குறுந்திரைப்படம்

    2016 - 1

  • Thank GOD - குறுந்திரைப்படம்

    2017

  • இதாங்க நம்ம வாழ்க்க - குறுந்திரைப்படம்

  • தடுமாற்றம் - குறுந்திரைப்படம்

  • ஆவியா 2 - குறுந்திரைப்படம்

  • படிக்கத்தாங்க ஆச - பாடல்

    2018

  • அழுக்கு மூட்டை - குறுந்திரைப்படம்

  • பணிப்பூ - குறுந்திரைப்படம்

    Mixing

  • சிறுவி - குறுந்திரைப்படம்

  • தொலைந்தேனே - பாடல்

    2019

  • நிலவே - பாடல்

  • என்ன எழவுடா - பாடல்

  • ஆனா நீங்க - குறுந்திரைப்படம்

  • புள்ளிங்கோ - குறுந்திரைப்படம்

    Mixing

  • தமிழர் சேனை - பாடல்

  • காதல் வந்திச்சி - பாடல்

  • வாயாடி - பாடல்

    2020

  • மீண்டும் ஒரு நிமிடம் - குறுந்திரைப்படம்

  • Accept Pannu DI - பாடல்

  • அம்மா - குறுந்திரைப்படம்

  • காதல் - குறுந்திரைப்படம்

  • வேட்டையன் முழு நீளத்திரைப்படத்தின் டைட்டில் பாடல்

  • சண்டாளி - பாடல்

  • Corona is Karma - பாடல்

  • மையற்கனா - பாடல்

  • தழும்பு - குறுந்திரைப்படம்

    Mixing

  • உயிர் இல்லா உடலில் - பாடல்

  • மறைபுதிர் - குறுந்திரைப்படம்

  • உனக்கே உனக்காய் - பாடல்

    2021

  • போகுதே 3D Animation - பாடல்

  • ஆராரோ அம்மா - பாடல்

    2022

  • Missing You - பாடல்

  • சொல்லடி கனவே - பாடல்

  • நீல வானம் - பாடல்

  • நெஞ்சு அள்ளுதே - பாடல்

  • வாழ்வதா சாவதா - பாடல்

  • கண்ணாடி கண்ணம்மா - பாடல்

  • அசத்துற - பாடல்

  • உயிரினில் கலந்தவளே - பாடல்

    2023

  • Campus பொடியன் - பாடல்

  • மீன் பாடும் ஊரு - பாடல்

  • கார் கூந்தல் - பாடல்

  • நாடும் நல்லால - பாடல்

  • கனவாக நீ - பாடல்

  • தீக்குச்சி - பாடல்

  • AMCOR விழிப்புணர்வு 15 குறும்படங்கள்

  • சங்காரம் - முழு நீளத்திரைப்படம்

  • போடியார் - முழு நீளத்திரைப்படம்

  • GPS - திரைப்படம்

    Mixing

  • மிருகம் - குறுந்திரைப்படம்